சமீப ஆண்டுகளாக 1980-களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் வருடத்தில் ஒரு நாள் சந்தித்து பேசி வருவது தெரிந்ததே.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில்கூட 1980-களின் ஹீரோ ஹீரோயின்கள் நிகழ்ச்சி நட்சத்தி ஓட்டல் ஒன்றில் நடைபெற்று அது தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பானது தெரிந்ததே.
இதேபோல் 1990-களில் அறிமுகமான நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர் ஆகியோரின் சந்திப்பு சென்னையில் நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் நடிகர்கள் விஜய், சூர்யா, பார்த்திபன், அரவிந்தசாமி, ஜெயராம், நடிகைகள் ஜோதிகா, மீனா, ரோஜா, சிம்ரன், சங்கவி, சங்கீதா, மகேஸ்வரி, டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர் சி, வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள். விஜய், ஏ.ஆர்.ரகுமான், மகேஸ்வரி ஆகியோரை தவிர, மற்றவர்கள் அனைவரும் வெள்ளை சீருடையில் வந்திருந்தார்கள்.
இந்த சந்திப்பின் நினைவாக, ‘கேக்’ வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டார்கள். ‘போட்டோ’ எடுத்துக் கொண்டார்கள். பின்னர், அனைவரும் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த சந்திப்பு பற்றி பேசிய டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் “1990-களில் அறிமுகமான நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதலில், சின்னதாக ஒரு சந்திப்பு நடந்திருக்கிறது. இனிமேல் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.
இரண்டே நாட்களில் ஏற்பாடு செய்ததால், நிறைய பேர்களுக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. 1990-களில் அறிமுகமான எல்லோரையும் அழைக்க தவறி விட்டோம். அடுத்த சந்திப்பில் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
இந்த சந்திப்பு பற்றி கேள்விப்பட்டு தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள், நாங்களும் வர முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். எங்களின் அடுத்த சந்திப்பு அவர்களையும் இணைத்து மிகப் பெரிய அளவில் இருக்கும்…”’ என்றார்.
விடுபட்ட லிஸ்ட்டுகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அஜீத் வழக்கம்போல மிஸ்ஸிங்..! எப்படியோ சந்தோஷமா இருந்தால் சரிதான்..!