கிரியேட்டிவ் சினிமாஸ் NY – NJ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் M.M.சந்திரமௌலி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் புதிய படமொன்றில் நடிக்கிறார்.
2011-ம் ஆண்டு தெலுங்கில் வெற்றிப் பட இயக்குநரான B.சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை செய்த திரைப்படம் ‘100% லவ்’.
தற்போது இந்தப் படத்தைத் தெலுங்கில் கதை எழுதி இயக்கிய இயக்குநர் B.சுகுமார் தமிழில் கிரியேடிவ் சினிமாஸ் NY என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை NJ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.
இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். ‘பேக் வாட்டர்ஸ்’, ‘நடாஷா’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான M.M.சந்திரமௌலி இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
சினிமா படிப்பில் பட்டம் பெற்றவரான இவர் கூறுகையில் “பெரும் பொருட்செலவில் லண்டனில் தயாராகவுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகவுள்ளது…” என கூறினார்.
‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, ‘சிங்கம்’ என பல ஹிந்தி வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டட்லி, இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.