full screen background image

100% காதல் – சினிமா விமர்சனம்

100% காதல் – சினிமா விமர்சனம்

Creative Cinemas NY, NJ Entertainment ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுகுமார், மற்றும் புவனா சந்திரமெளலி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஆர்.வி.உதயகுமார், ஜெயசித்ரா, ரேகா, தலைவாசல் விஜய், தம்பி ராமையா, அப்புக்குட்டி, மனோபாலா, சாம்ஸ், முருகானந்தம், யுவன் மயில்சாமி, ஷிவானி பட்டேல் மற்றும் குழந்தை நட்சத்திரங்களான ஜோஷூவா, சந்தோஷ், கெளஷிக், டக்ஸ், ருத்திஷா, அக்சயா போன்றோரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – எம்.எம்.சந்திரமெளலி. தயாரிப்பு நிறுவனம் – Creative Cinemas NY, NJ Entertainment, தயாரிப்பாளர்கள் – சுகுமார், புவன சந்திரமெளலி, இணை தயாரிப்பு – ராஜ் பட்டேல், நடாஷா மாதாளம், துணை தயாரிப்பு – தபித்தா சுகுமார், கள தயாரிப்பாளர்கள் – சலபதி, நிகில் முருகன், ஒளிப்பதிவு – ஆர்.கணேஷ், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலரிஸ்ட் – நந்தகுமார், கலை இயக்கம் – தோட்டா தரணி, வசனம் – ராமசேஷன், அந்தோணி பாக்யராஜ், சவரிமுத்து, இணை இயக்கம் – ராமசேஷன், பாடல்கள் – சினேகன், மோகன்ராஜன், ஒலிக்கலவை – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், சிறப்பு சப்தங்கள் – சேது, நடன இயக்கம் – நிக்ஸன், சேகர், ஆடை வடிவமைப்பு – கவிதா சச்சி, ஒப்பனை – பாலமுருகன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், விளம்பர வடிவமைப்பு – சுரேஷ் அஞ்சான், புகைப்படங்கள் – சந்திரா, விஷுவல் எபெக்ட்ஸ் – பிரிஸம் அண்ட் பிக்ஸல்ஸ், பிக்ஸலாய்டு.

நாயகன் பாலுமகேந்திரா என்னும் ஜி.வி.பிரகாஷ் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவரது அத்தை பெண்ணாண ஷாலினி பாண்டேவும் இதே கல்லூரியில் பி.இ. படிக்க ஜி.வி.யின் வீட்டுக்கே வருகிறார். இவர்களது வீட்டில் தங்கி படிக்கத் துவங்குகிறார்.

எதிலும், எங்கேயும் படிப்பில் முதலிடத்தில் மட்டுமே இருக்க விரும்பவும் ஜி.வி.பிரகாஷ் பெருத்த ஈகோ பிடித்தவராக இருக்கிறார். தனக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி அழுகும் ஷாலினிக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். விளைவு அடுத்த செமஸ்டரில் ஜி.வி.பிரகாஷை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டுவிட்டு தான் முதலிடத்தைப் பிடிக்கிறார் ஷாலினி பாண்டே.

ஜி.வி.பிரகாஷ் கோபமாகிறார். ஷாலினி மீது பொறாமை கொள்கிறார். ஷாலினி ஜி.வி.பிரகாஷ் மீது காதல் கொள்கிறார். ஆனால் அந்தக் காதலை இன்பாச்சுவேஷன் என்று சொல்லி புறந்தள்ளுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

மூன்றாவது செமஸ்டரில் இவர்கள் இருவரையும் தள்ளிவிட்டுவிட்டு அஜய் என்ற மாணவன் முதலிடத்தைப் பிடிக்க இப்போது இருவரின் பார்வையும் அஜய் மீது விழுகிறது. நான்காவது செமஸ்டரில் அஜய்யை வீழ்த்துவதற்காக அஜய்யை காதலிப்பதுபோல் நடிக்கிறார் ஷாலினி. இந்தக் குழப்பத்தில் அஜய் சரியாகத் தேர்வு எழுதாமல் போக அந்த இடைவெளியில் ஜி.வி.பிரகாஷ் முதலிடத்தைப் பிடிக்கிறார்.

இதற்காக நடத்தப்படும் ஒரு பார்ட்டியில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே இருவருக்குமிடையில் ஏற்படும் வாய்த் தகராறு அவர்களின் குடும்பத் தகராறாக மாறுகிறது. ஷாலினி வீட்டைவிட்டு வெளியேறுகிறார். ஜி.வி.யும் அவரை மறக்க முயல்கிறார். இடையில் ஷாலினிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதேபோல் ஜி.வி.பிரகாஷூக்கும். ஆனால் இருவர் மனதிலும் இருப்பதும் வேறு.. வேறு..

அது என்ன  என்பதும்.. இறுதியில் யார், யாருக்குக் கல்யாணம் நடந்தது என்பதும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

2011-ம் ஆண்டு தெலுங்கில் நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான 100% லவ் என்கிற படத்தில் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம்.

இடையில் 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் திரையுலகமும், சமூகமும் கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தெலுங்கு படத்தை அப்படியே பிரதியெடுத்தாற்போல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சந்திரமெளலி.

கதையின் மையக் களமே காதலர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோதான். அந்த ஈகோவையும் தாண்டி காதல் பற்றி நினைக்கவே முடியாத அளவுக்கு அவர்கள் இருப்பதாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப் படத்தைக் காதல் படமாகவே கருத முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷூன் உருவத்திற்கும், கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கும் ஏற்ற கதைதான். பருவ வயது பிரச்சினைகளை அவர் அணுகும்விதமும், அதைக் காட்சிப்படுத்தியிருப்பதும்தான் இந்தப் படத்தை அந்நியப்படுத்தியிருக்கிறது. ஆனால் நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஷாலினி பாண்டேயின் முகத்தைவிடவும் அவரது இடுப்பே அதிகக் காட்சிகளில் நடித்திருக்கிறது. தொப்புளைக் காட்டி காமத்தைத் தூண்டிவிட்டு காதலை வரவழைப்பது முறையில்லையே.. இப்போதெல்லாம் காதல் எதைப் பார்த்து வருகிறது என்பதே தெரியாத சூழலில் இப்படியொரு திரைக்கதையை அமைத்தால் காதல் பீலிங் படம் பார்ப்பவர்களுக்கு எப்படி வரும்..?

‘இன்பாச்சுவேஷன்’ என்று இருவரும் அடிக்கடி சொல்வது போல படத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே ‘இன்பாச்சுவேஷனாகத்தான்’ இருக்கிறது. பிறகெப்படி இதுவொரு காதல் திரைப்படம் என்று நம்புவது..?

பாட்டி ஜெயசித்ரா, தாத்தா நாசரின் கதையும் இடையில் வருகிறது. மிக நீண்ட வருடங்களாக பிரிந்திருப்பவர்கள் இவர்களது கல்யாணத்துக்காக வந்து ஒன்றிணைகிறார்கள். இதையும் தெலுங்கு மசாலா போலவே இணைத்திருக்கிறார்கள்.

அமெரிக்க ரிட்டர்ன் மாமாவான தம்பி ராமையாவுக்கு சரியான தீனி கொடுக்கவில்லை. சிரிக்க வைக்க மறந்திருக்கிறார். அம்மாவாக ரேகாவும், அப்பாவாக தலைவாசல் விஜய்யும் கொஞ்சம் நடித்திருக்கிறார்கள். அப்புக்குட்டியும் ச்சும்மா பேருக்குப் படத்தில் இருக்கிறார். மனோபாலா அடிக்கடி ‘கல்லூரி பில்டிங்கிற்கு பெயர் வைக்கிறேன்’ என்று சொல்லி வந்து அசுர மொக்கை போடுகிறார்.

மேலும் சில குட்டீஸ்களும் இவர்களது வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார்களாம். அவர்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்களும், வீட்டில் இருப்பதற்கான காரணங்களும் இருந்தாலும் எந்த வீட்டில் இப்படி சின்னப் பிள்ளைகளை அடுத்தவர்கள் வீட்டில் தங்கிப் படிக்க வைப்பார்கள்… இவர்களது பெற்றோர்கள் யார்.. எங்கே இருக்கிறார்கள்.. இதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் திரைக்கதையில் நகர்த்தியிருக்கிறார்கள்.

கணேஷின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும். ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் திரும்பத் திரும்பக் கேட்கும் ரகமல்ல. உண்மையான பாராட்டுக்குரியவர் கலை இயக்குநர் தோட்டாதரணிதான். அந்த வீட்டின் உட்புறத்தை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்.

இதேபோல் கணிதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், ஜி.வி.பிரகாஷின் சொந்தப் பொருட்கள் பற்றிய விஷயத்திலும் அதிக அக்கறை காட்டி ரசனையாகப் படமாக்கியிருக்கும் இயக்குநர், திரைக்கதையை தமிழுக்கேற்றவாறு.. அதுவும் இன்றைய 2019-ம் ஆண்டுக்குரியதுபோல மாற்றியிருந்தால் ஜி.வி.பிரகாஷூக்காச்சும் பெயர் சொல்லும் படமாக இது அமைந்திருக்கும்..!

இப்போது அரை கிணறு தாண்டிய கதையாக மட்டுமே, இந்தக் காதல் அமைந்திருக்கிறது..!

Our Score