எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் அஜீத்.. பில்லா-2-ல் சறுக்கியதை ‘ஆரம்ப’த்தில் கொஞ்சம் மீட்டெடுத்தவர்.. இதனைவிடவும் அதிகமாக குடும்பங்களை நெருங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதுதான் இந்த வீரம்..
அவருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வேடம். முரட்டுக் காளையை கொஞ்சம் புரட்டிப் போட்டு இந்தக் காலத்துக்கேற்றாற்போல் திரைக்கதையை மாற்றியமைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா..
ஊரில் ‘விநாயகம் பிரதர்ஸ்’ என்றால் அவ்ளோ மரியாதை.. 4 தம்பிகளுக்கு அண்ணனாக இருக்கும் விநாயகம் தல அஜீத் மீது எதுக்கு இந்த மரியாதைன்னா அண்ணன் பாசத்தைக் காட்டினாலும் சரி.. பொளந்து கட்டினாலும் சரி.. இரண்டையும் சரிசமமா டன் கணக்குல காட்டுறாரு.. அதுனால..! தன்னோட 4 தம்பிகளுக்காக கல்யாணமே வேண்டாம்னு சொல்லி ஒதுங்கியிருப்பவரை எப்படியாச்சும் கல்யாணம் செய்ய வைக்கணும்னு சொல்ல வைக்குது தம்பிகளின் காதல்.. அஜீத்தின் சின்ன வயசு நண்பரும், இப்போதைய மாவட்ட கலெக்டருமான ரமேஷ்கண்ணாவிடம் அஜீத் சின்ன வயசுல காதலிச்ச கோப்பெருந்தேவியின் கதையை கேட்டு பெருமூச்சு விடுகிறார்கள் தம்பிகள்.. அதே நேரம் இதே பெயரில் தமன்னா அந்த ஊருக்குள் வர.. தில்லாலங்கடி வேலைகளெல்லாம் செய்து அஜீத்தை எப்படியோ லவ் செய்ய வைக்கிறார்கள்.. பெண் கேட்டு தமன்னா ஊருக்கு போகும்போது அங்கே பெரிய அடிதடியாக.. தமன்னா குடும்பத்தை அழிக்க ஒரு சிலர் முற்பட.. அதைத் தடுத்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் தல.. எப்படி அதை முடிச்சாருன்றதைத்தான் ரொம்ப, ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி முடிச்சிருக்காங்க..!
அஜீத்திற்கு பொருத்தமான கேரக்டர்தான்.. சாப்பிடுங்க.. சாப்பிடுங்க.. தம்பி அண்ணனுக்கு சாம்பார் ஊத்துப்பா என்று சிரித்தபடியே சொல்லவது.. தம்பி கேட்டை இழுத்துச் சாத்து என்று சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு தயாராகும் வீரமெல்லாம் அஜீத்தால் மட்டுமே முடியும்..
‘கோப்பெருந்தேவி’ பெயரை கேட்டவுடன் ஜெர்க்காகி பின்பு தனக்குள் வரும் காதலை மறைக்க முடியாமல் தவித்தபடியே அதனை நாசூக்காக தனது மரியாதை கெடாமல் வெளிப்படுத்தும்வித்த்தில் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ஷொட்டு.. இன்னிக்கு போய் அந்தக் காதலை கட் செஞ்சுடறேன்னு சொல்லிட்டு போய் லிப் லாக்ல மாட்டிக்கிட்டு டூயட் பாட சுவிஸுக்கு கூட்டிட்டுப் போன, இயக்குநருக்கு மேலும் ஒரு ஷொட்டு..!
தம்பிகளாக நடித்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு பக்கம் அளவுக்கு வசனங்கள் இருந்தாலே ஆச்சரியம்.. இதில் பாலாவும், விதார்த்தும் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறார்கள்.. தமன்னா கொஞ்சம் குண்டாகியிருக்கிறார். ஆனால் எந்தச் சேதாரமும் இல்லாமல் அன்று போல் இன்றும் அவருடைய மத்தியப் பிரதேசம் பளிச்சென்று இருக்கிறது.. கேமிரா பாடல் காட்சிகளில் அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் நாமளும் அதைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.. வெகு இயல்பான காட்சிகளிலேயே சாதாரணான டயலாக் டெலிவரியிலேயே காமெடி ரகளை செய்திருக்கிறார்கள்.. அஜீத் குருமா வைக்கப் போன கோழியை தமன்னா பிடித்துக் கொடுக்கும் காட்சி ஒரு உதாரணம்..
நமக்கு கீழே இருக்குறவங்களை நாம பார்த்துக்கிட்டா நாமளை ஆண்டவன் பார்த்துக்குவான் என்ற பஞ்ச் டயலாக் இனி தமிழகத்தில் யாராலேயும் மறக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.. இதே போல படத்தில் இடம் பெறும் பல வசனங்களும் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன.. ஜாதி பற்றி அஜீத் ஓரிடத்தில் குறிப்பிடும் இடத்தில் தியேட்டரே அதிர்கிறது.. பரதன் மற்றும் சிவாவின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய ஹார்லிக்ஸ்..!
பெயில் பெருமாள் என்ற பெயரில் முதல் பாதியில் படத்தை பெருமளவுக்கு தனது காமெடியால் நகர்த்தியிருக்கிறார் சந்தானம்.. பாராட்டுக்கள்.. படத்தின் பிற்பாதியில் தம்பி ராமையா தனது காமெடியில் தொய்வில்லாமல் கொண்டு போக உதவியிருக்கிறார்கள்.. ஆக.. தலையாக இருந்தாலும்.. தளபதியாக இருந்தாலும் துணைக்கு காமெடிகள் அவசியம் தேவை என்பதை ஜில்லாவும், வீரமும் காட்டியிருக்கு..!
தேவி பிரசாத்தின் இசையில் ஏதோ பாடல்கள் ஒலித்தன.. விவேகாவின் வரிகளாம்.. எனக்குத்தான் புரியலை.. தல.. பாடல் காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்த மறுக்கிறார்போல் தெரிகிறது.. கொஞ்சம் பாடல்களை முணுமுணுக்க வைச்சாத்தான் என்னவாம்..? எத்தனை கோடி செலவு பண்றீங்க..?
சண்டை காட்சிகளுக்கு இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் போலும்.. டிரெயின் சண்டை காட்சியே பிரமிப்பூட்டுகிறது.. ஒத்தை ஆள் அத்தனை பேரையும் தூக்குவது என்பது ஹீரோக்களின் சாகசம் என்பதால் நாம் இதற்கு மேல் கேள்வி எதையும் கேட்க முடியாது.. அது ரசிகர்களுக்கும் தெரியுமென்பதால் இதனை பெரிய குறையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. சண்டை பிரியர்களுக்காக அற்புதமாக அமைத்திருக்கும் சண்டை இயக்குநர்களுக்கு ஒரு ஷொட்டு..!
என்னதான் நண்பனாக இருந்தாலும் வேலை வெட்டியில்லாத கலெக்டர் மாதிரி அஜீத் வீட்டையே சுத்தி சுத்தி வரும் ரமேஷ் கண்ணாவின் கேரக்டர் சுத்த லாஜீக் மீறல்.. 1960-களின் படங்களில் வந்ததை போன்று குடும்பத்தின் மீதான தாக்குதலை அவர்களிடத்தில் சொல்லாமல் தானே சமாளித்து.. அவர்களே அஜீத்தை சந்தேகப்படும் சூழலுக்கு வந்து.. பின்பு கிளைமாக்ஸில் உண்மை தெரிந்து நாசர் கேள்வி கேட்டு படத்தை முடித்துவைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றாலும் குடும்ப காக்டெயில் பார்ட்டியை போல் ஒரு பீலிங்கை படம் கொடுப்பதால் ஏற்க முடிகிறது..
இந்தப் படம் அஜீத் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரையும் பெரிதும் கவர்ந்திருப்பது இப்போதுவரையிலான தியேட்டர் வசூலை பார்த்தாலே தெரிகிறது.. இதனை மனதில் வைத்து இனிமேலான படங்களில் கதையை செட்செய்து வீட்டின் மூத்த பிள்ளையாக அஜீத் வலம் வந்தால் அவர் என்றென்றும் தலையாகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை..!
இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.. அதுவும் ஜெயிக்கட்டும்..! வாழ்த்துகள்..!