full screen background image

பிரியாணி – விமர்சனம்

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு முன்பாகவே இதனை திரைக்குக் கொண்டு வந்திருக்கலாம்..! கார்த்தியின் மார்க்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்..! இப்போது திரும்பவும் ஒரு வெற்றியைக் கொடுத்திருக்கிறார் என்கிற சின்னப் பெயர்தான் கிடைத்திருக்கிறது.. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜாவின் திறமைக்கு ஒரு பாராட்டு..!

வெங்கட்பிரபுவின் ‘மங்காத்தா’ எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டோ அதில் 60 சதவிகிதத்தை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறது..! இப்போதைய ரசிகர்களுக்குப் பிடித்தளவில் காக்டெயிலுடன் கொஞ்சம் லெமன் சோடாவையும் கலந்து கொடுத்து பித்தத்தையும் சமாளித்திருக்கிறார் இயக்குநர்.

அலுவலக வேலையாக ஆம்பூர் செல்லும் கார்த்தியும் பிரேம்ஜியும் சரக்கடித்தவுடன் பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் கதை தேடி அலைகிறார்கள்.. கிடைத்த கடையில் கூடவே ஒரு பெண்ணும் கிடைக்கிறார்.. அந்த பெண்ணுடன் கெஸ்ட் ஹவுஸுக்கு உடன் செல்கிறார்கள். அது தங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு சதி என்பதை அறியாமலேயே மேலும், மேலும் போதையில் இறங்க.. விழித்துப் பார்க்கும்போது ஒரு கொலை குற்றவாளியாக இருக்கிறார்கள் இருவரும்.. தாங்கள் கொலை செய்திருக்க மாட்டோம் என்று அவர்கள் நம்பினாலும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும், சாட்சிகளும் அவர்களுக்கெதிராக இருக்க.. போலீஸாரிடமிருந்து தப்பித்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்..! இதுதான் கதை..!

திரைக்கதையில்தான் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு.. முதல் காட்சியில் இருந்தே பிரேம்ஜியை வாரி விடுவதிலும், ஹன்ஸிகாவின் காதலுடனேயே படத்தைத் துவக்கியிருப்பதும்.. காதலின் மோதல்,, ஊடல்.. பின்பு கூடல்.. என்று பாடல் காட்சிகளுக்கும், திரைக்கதைகளுக்கும் வேலையே வைக்காமல் அப்படியே நூல் பிடித்ததுபோல சென்று இடைவேளையில் வரும் அந்த டிவிஸ்ட்டுடன் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டார்..!

சின்ன வயதில் இருந்தே பிரேம்ஜிக்கு செட்டாகும் பெண்களையெல்லாம் தன்வசப்படுத்தும் கார்த்தியின் ஜாலித்தனம் ஹன்ஸிகாவரையிலும் வந்து நிற்க.. மேலும் மேலும் பிரேம்ஜியை நோகடிக்கும் காட்சிகளெல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறது..! அதிலும் ஆம்பூரில் மாயாவை காரில் பிக்கப் செய்து போகும்போது பேசும் வசனங்கள் ஷார்ப்னெஸ்..! நீங்க காரை பத்திதான பேசுறீங்க என்ற பிரேம்ஜியின் சந்தேகமும்.. அதே வசனம் அப்படியே உல்டாவாக மாறி கார்த்தி கேட்பதுபோல வருவதும் வெங்கட்பிரபுவின் ஸ்பெஷலாட்டி..!

இடைவேளைக்குப் பின் செத்துப் போனவரை உயிருடன் இருப்பதாக காட்டி.. இவர்களை யாரோ கடத்திச் சென்றுள்ளதாக பிளானை மாற்றுவதும் சூப்பர் திரைக்கதை.. வெறும் காட்சிகளுக்காக மட்டுமில்லாமல் திரைக்கதைக்காகவே கைதட்டல் இந்த இடத்தில் கிடைத்தது..! உமா ரியாஸை ஆட்டுவிப்பது ராம்கிதான் என்பதுபோலவே கதையைக் கொண்டு சென்று, கடைசியில் அதுவும் இல்லை என்று இன்னொரு கிளைமாக்ஸை திணித்ததில்கூட விறுவிறு சுவாரஸ்யம்..!

அக்காவுக்குக் கல்யாணம்.. அது நிற்கப் போகிறது.. மாமா கத்திக்குத்தில் ஆஸ்பத்திரியில் வாசம்.. குடும்பத்தினர் மீது தாக்குதல்.. என்று சென்டிமெண்ட்டைகூட ஒரு அளவாக வைத்துக் கொண்டு ஆக்சன் படலத்தை பிற்பாதியில் நச் என்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. மாயாவை டிரெயினில் தள்ளிவிடும் காட்சி எதிர்பாராதது..! உமா ரியாஸின் என்ட்ரியும், அவரது காட்சிகளுமே படத்தின் டெம்போவை இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது..!

லாஜிக் மிஸ்டேக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சம்பத்தின் வருகைதான் கொஞ்சம் மொக்கைத்தனமாக இருந்துவிட்டது.. இவ்ளோ பெரிய கேஸ்ல சர்வ சாதாரணமா “ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்..” என்று சொல்லி சம்பத் என்ட்ரி ஆவது கேலிக்கூத்தாகிவிட்டது..! சி.பி.ஐ. சோதனை மற்றும் விசாரணையையும் சேர்த்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகியிருக்கும்..! சம்பத்துக்கும் கூடுதல் வேலை கிடைத்திருக்கும்..! பிரேமின் ஊடுறுவலை சம்பத் கண்டுபிடிப்பதெல்லாம் பட், பட்டென்று கதையை முடிக்கும்விதமாகவே முடிந்துவிட்டது..!

கார்த்திக்கு ஒரே மாதிரியான கேரக்டரில் இது 5-வது படமென்று நினைக்கிறேன்..! இப்படியே போனால் மோகனுக்கு ‘மைக்’ போன்று கார்த்திக்கு ‘பேக்கு’ என்றாகிவிடும்.. அடுத்தப் படத்திலாவது கெட்டப்பை மாற்றியாவது அல்லது பாலா போன்ற இயக்குநர்களிடம் சிக்கிவிட்டு திரும்ப வருவது அவரது நடிப்பு கேரியருக்கு நல்லது..! இந்தக் கேரக்டருக்கு கார்த்தி கச்சிதம் என்பதும் உண்மைதான்..! வழியல்.. அவியல்.. பொங்குதல்.. எல்லாமே அவங்கப்பா மாதிரியேதான் இருக்கு..!

ஹின்ஸிகாவுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.. டப்பிங் வாய்ஸ் கொடுத்த அம்மணிக்கு ஒரு ‘ஓ’ போடணும்..! பாடல் காட்சிகளில் கொஞ்சம் ரம்மியமாகத் தெரிகிறார்.. இவர் போன்ற நடிகைகளை ஹீரோக்களின் பெருமைக்காகவே நடிக்க வைக்கிறார்கள். மற்றபடி ஹன்ஸிகாவால் எந்தப் படமும் ஓடவில்லை என்பதும் உண்மை..! சம்பளம் பல லட்சங்களில் ஏன் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

பிரேம்ஜிதான் படத்தின் டாக் ஆஃப் தி மேன்..! கார்த்திக்கு அத்தனை ஈடு கொடுத்திருக்கிறார்.. ஆம்பூருக்கு வரும் 3 பொண்ணுகளை பார்த்து வழியத் துவங்கி.. அந்த மூன்று பேரையுமே கார்த்தி உஷார் செய்துவிட்டார் என்பதையறிந்து கொதிக்கும் காட்சியில் மனுஷன் பாவம்.. உண்மையான கேரக்டர் போலும்..! அனுபவித்து நடித்திருக்கிறார்..! சரவெடி டயலாக்குகளை சர்வசாதரணமாக பேசிவிட்டு கைதட்டலை வாங்கிச் செல்கிறார்..! இப்படியே கொஞ்சம் மோல்டு செய்தால் வேறு பாணியிலான நகைச்சுவைக்கும் இவர் தேறலாம்..!

யுவனுக்கு இது 100-வது படமாம்.. சொல்லிக்கலாம்.. பட்.. வேறு எதுவும் சொல்வதற்கில்லை..! பின்னணி இசையில் மட்டுமே ரீங்காரம்.. இப்போதெல்லாம் அதிக டூயட் காட்சிகளை மாண்டேஜ் ஷாட்ஸ்களாகவே எடுப்பதன் அர்த்தம் இசை போணியாகவில்லை என்பதுதான்..! இக்கால ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது..!

அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஒரே நாளில் ஒரேயொரு கேள்வி கேட்டதற்காகவே கார்த்தியை தன்னுடைய மருமகனாக்க விரும்புவது.. சம்பத்தின் சி.பி.ஐ. என்ட்ரி.. அத்தனை போலீஸ்காரர்களையும் அடித்து வீழ்த்திவிட்டு கார்த்தி தப்பிப்பது.. திரும்பவும் அதே கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திறங்கும் கார்த்தி, எந்தப் பிரச்சினையுமில்லாமல் அறைக்குள் செல்வது.. காரில் தப்பித்துச் செல்லும் சில காட்சிகள்.. செல்போனை டிரேஸ் செய்தாலே பிடித்திருக்கும் சூழல் உண்டு என்றாலும், அதனைத் தவிர்த்திருப்பது.. இவ்வளவு பெரிய கேஸாகியும் கார்த்தியின் நண்பர்களைவிட்டுவைத்து வேடிக்கை பார்ப்பது.. ஜெயபிரகாஷுக்கு கீழே வேலை பார்க்கும் பிரேம், சி.பி.ஐ.க்கு உளவு வேலை செய்வது.. இவரே மெயின் வில்லனாக பின்னால் மாறுவது.. என்று பல பல பிரச்சினைகளும், கேள்விகளும் படம் முடிந்த பின்பு கிளம்பினாலும் படம் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத என்ட்டெர்டெயிண்ட்மெண்ட் சூழலுக்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றியதால் படத்தின் ஓட்டம் மிகவும் ரசிக்க வைத்தது..!

டாஸ்மாக் கடை.. தண்ணி, சரக்கு.. பெண்களை லெக் பீஸ் என்றே அழைப்பது.. காமம் வழிந்தோடிய பாடல் காட்சிகள்.. இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என்று பலவும் இருப்பதால் உண்மையில் இந்தப் படத்திற்கு A சர்டிபிகேட்டுதான் கிடைச்சிருக்கணும்.. இத்தனை போராடியும், எதிர்த்தும் U/A-வாவது கொடுத்தார்களே என்கிறபோது சென்சார் போர்டுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

ம்.. அவசியம் பார்க்க வேண்டிய படமில்லை. பட்.. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்ன்னா பார்த்துக்கலாம்..!

Our ScoreLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *