full screen background image

நம்ம கிராமம் – விமர்சனம்

நம்ம கிராமம் – விமர்சனம்

“எப்போ பார்த்தாலும் காதல், கசமுசா, வெளிநாட்டு லொகேஷன்ல டான்ஸ்.. டாஸ்மாக் சரக்கு.. டபுள் மீனிங் டயலாக்கு.. குத்துப் பாட்டு.. கடைசி ரீல்ல அறிவுரை.. இப்படியே எடுத்து வைச்சு இதையும் ஒரு கூட்டம் விடியற்காலை 5 மணிக்கே கியூல நின்னு பார்த்து புல்லரிச்சிட்டுப் போகுது.. இதுதான் சினிமாவா..? ஏதாவது புதுசா, நல்லதா பண்ணுங்கப்பா.. ஈரான் படம் பாரு.. ஐரோப்பிய படங்களை பாரு.. எத்தனை எத்தனை விதவிதமான படங்கள் வருது.. அது மாதிரி எடுத்துக் கொடுக்கக் கூடாதா..? திருப்பித் திருப்பி இந்த சாக்கடையைத்தான் தரணுமா…………………………….?”

இப்படித்தான் சினிமா ரசிகர்களாக தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் முற்போக்காகவே தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமை. அதன் வியாபாரம்.. வர்த்தகத் தொடர்புகள்.. தோல்விகள்.. இவை எவை பற்றியும் கவலைப்படாமல்.. தெரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டே போவார்கள்.. பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. ஆனால் ஒரு நல்ல படம் வந்தால் அதனை வரவேற்று தங்களால் முடிந்த பரப்புரையைச் செய்வோம்.. அதனை பாராட்டுவோம்.. ஆராதிப்போம் என்பதையெல்லாம் மட்டும் வசதியாக மறந்துவிடுவார்கள்..!

ஒரு நல்ல சிறுகதை போன்றதுதான் இந்த ‘நம்ம கிராமம்’ திரைப்படம். 2012-ம் ஆண்டு மலையாளத்தில் ‘கிராமம்’ http://en.wikipedia.org/wiki/Gramam என்ற பெயரில் வெளியான படம் இது.. அந்த வருடத்திய சிறந்த கதைக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றது. சிறந்த ஆண் பாடகருக்கான மாநில அரசின் விருதும் இப்படத்திற்கே கிடைத்தது. இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை சுகுமாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. சிறந்த காஸ்ட்யூம்ஸ் டிசைனருக்கான தேசிய விருதும் இதே படத்திற்குக் கிடைத்தது. அவார்டு படம் என்றவுடனேயே இதுவும் அது மாதிரி மெதுவாக நகரும் மதிய நேர தூர்தர்ஷன் படமாக இருக்குமோ என்று நினைத்து தமிழ் ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது..

வந்தவேகத்திலேயே தியேட்டர்களில் காணாமல் போய்விட்டது. படத்தினை எழுதி, இயக்கி, தயாரித்தவர் பழைய நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் சர்மா. அவரால் முடிந்த அளவுக்கு விளம்பரப்படுத்தி வைத்தார்.. ஆனால் எடுத்துச் செல்லும் ஊடகங்கள் அந்த ஒரு வாரம் மட்டுமே கொஞ்சமே இதனை முன் வைத்து சொல்லிவிட்டு தங்களது கடமையை ஊத்திக் கொண்டுவிட்டன.. படம் தமிழகத்தில் இன்னமும் பல ஊர்களைத் தொடவேயில்லை என்பதுதான் உண்மை..! மலையாளம்தானே.. நேரடி தமிழ் இல்லையே என்றாலும் படத்தினை பாருங்கள்.. மலையாள வாடையே தெரியாது.. டப்பிங்கில் அந்த அளவுக்கு தமிழ் விளையாடுகிறது..!

நிஷான், சம்விருத சுனில், நெடுமுடி வேணும், மோகன்சர்மா, ரேணுகா, சுகுமாரி, ப்ரியா, நளினி, ஒய்.ஜி.மகேந்திரன், பாத்திமா பாபு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மது அம்பட்.. சிறந்த கலைஞர்களை வைத்து சிறப்பான முறையில் கதையெழுதி இயக்கியிருக்கிறார் மோகன் சர்மா..

கதை 1938-ல் துவங்குகிறது. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலக்காடு அருகில் ஒரு சிறிய கிராமம்.. ஊரில் அதிகம் பேர் ஆச்சாரமான பிராமணர்கள். அந்தக் காலத்திய ஆச்சார, அனுஷ்டாங்களை அப்படியே கடைப்பிடிக்கும் குடும்பம் இது.. மோகன்சர்மாவின் அம்மா சுகுமாரி. கணவரை இழந்தவர்.. மொட்டையடித்து, முக்காடிட்டு வீட்டின் பின்பக்கத்திலேயே சுழன்று கொண்டிருப்பவர்.. ரேணுகா, மோகன் சர்மாவின் தங்கை. இவரது கணவர் உடல் நலமில்லாமல் இந்த வீட்டிலேயே கிடக்கிறார். ரேணுகாவின் மகள் துளசி. மோகன் சர்மாவின் மகன் கண்ணன்..

அக்கால வழக்கப்படியே 9-வது வயதிலேயே துளசியின் திருமணத்தை நடத்துகிறார் மோகன் சர்மா. அத்திருமணத்தை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை தனது ஊருக்குத் திரும்பியவுடனயே இறந்துபோக அந்தச் சின்ன வயதிலேயே பாட்டி சுகுமாரிக்கு உதவியாக பின்கட்டுக்கு நாடு கட்டத்தப்படுகிறாள் துளசி..

காலம் உருண்டோட.. இப்போது கண்ணன் வாலிப பையன்.. அவனுக்குத் திருமணம் செய்ய மோகன் சர்மா முடிவெடுத்து முயற்சியெடுக்கிறார். எதுவும் கைகூடவில்லை. அவருடைய ஆஸ்தான ஜோஸியரிடம் கலந்தாலோசிக்க.. அவர் சோலியைக் குலுக்கிப் போட்டு வீட்டில் தேமே என்று அமைதியாக இருக்கும் துளசிக்கு, இன்னமும் மொட்டையடித்து சடங்கு செய்யாமல் இருப்பதுதான் இந்தத் தோஷத்துக்குக் காரணம் என்று சொல்லிவிட்டுப் போகிறார்..

தனது மகனது நல்வாழ்க்கைக்காக துளசிக்கு மொட்டையடிக்கும் வைபவம் நடத்தத் திட்டமிடுகிறார் மோகன்சர்மா. இதனை கடுமையாக எதிர்க்கும் பாட்டி சுகுமாரி… “நான்தான் சின்ன வயசுலேயே வீணாப் போயிட்டேன். இவளையும் அப்படி செஞ்சிராத..” என்று மகனிடம் கெஞ்சுகிறாள்.. மோகன் மனசிரங்காமல் போக.. பாட்டி சுகுமாரி தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்கிறாள். அக்கால வழக்கப்படியே அம்மா, அப்பாவை இழந்த ஆண் மகன் வீட்டில் தலைக்கட்டு என்னும் முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவராக இருக்க முடியாது என்பதால் இப்போது மோகன் சர்மாவின் அதிகாரம் கீழிறங்க.. கண்ணன் தானே சுயமாக முடிவெடுத்து துளசியை திருமணம் செய்து கொண்டு அதற்குமேல் அந்த ஊரில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு ஊரைவிட்டே வெளியேறுகிறான். அன்றைக்குத்தான் இந்தியா சுதந்திரமடைகிறது..!

முழுக்க முழுக்க பிராமண பாஷையுடன்.. பிராமணாள்களின் பழக்க வழக்கப்படியே கதை நகர்ந்தாலும், பல இடங்களில் அந்த சாதி துவேஷத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.. தனது வீட்டில் வேலை செய்யும் வேறு சாதிக்காரரை தள்ளி நிற்க வைத்து பேசுவது.. தன் வீட்டுத் திருமணத்திற்கான பரிசைக்கூட தன் கை படாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து தூக்கி வீசுவது.. அடுத்த ஆட்கள் என்றால் குடிப்பதற்கு வேறு பாத்திரங்களைப் பயன்படுத்துவது.. கொல்லைப்புறத்திலேயே அவர்களை அமர்த்தி வைத்து பேசி அனுப்புவது.. அவாள்களை மட்டுமே வீட்டுக்குள் அனுமதிப்பது.. வெளியே போகும்போது அமங்கலியாக இருப்பதால் தனது பெற்ற தாயைகூட முன்னால் வரக் கூடாது என்று தவிர்ப்பது.. என்று அக்கால மூட நம்பிக்கைகளை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறார் பாலக்காட்டு பிராமணர்களின் வழி வந்த இப்படத்தின் இயக்குநர் மோகன் சர்மா.

இக்கதையின் இன்னொரு பக்கம் நெடுமுடி வேணு என்னும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேரக்டர். இவரது மனைவியாக பாத்திமா பாபு. பாத்திமாவின் தங்கையாக மாயா விஸ்வநாத். இவரை மோகன் சர்மா தனது ‘கீப்’பாக வைத்திருக்கிறார். மாலை மங்கியவுடன் வீட்டில் வேலை செய்பவன் ஓலைகளின் வெளிச்சத்தில் தீப்பந்தம்போல் பிடித்தபடியே முன்னால் செல்ல.. சிங்கம் ‘வேட்டை’க்கு போய் திரும்பி வருகிறது.. இதனை எந்த ஆச்சாரமும், அனுஷ்டானமும் தடுக்கவில்லை போலும்..!

பாத்திமா, மாயா இவர்களின் மூத்த அக்காவாக நாராயணி என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.. தனது இளம் வயதில் தான் காதலித்தவர் தன்னைவிட்டுச் சென்றுவிட்டதால் புத்தி பேதலித்து ஒரு மாதிரியாக இருப்பதாக சொன்னாலும், அவ்வப்போது இவர் போடும் அணுகுண்டுகள் நிச்சயம் தியேட்டரை அலற வைப்பவை..

ஊர் நாவிதர், தன் கடையில் ஒரேயொரு கத்தியை வைத்து வரும் அனைவருக்கும் ‘சேவை’ செய்கிறார். முதல் காட்சியில் அதே கத்தியை வைத்து சுகுமாரிக்கு மொட்டையடிக்கிறார். பின்னர் அடுத்த காட்சியில் அதே கத்தியை வைத்து வாத்தியார் நெடுமுடி வேணுவின் அக்குள் முடியையும், ‘அங்கே’ இருக்கும் முடியையும் சிரச்சேதம் செய்கிறார். இதைப் பார்த்துவிட்டு நாராயணி பாடும் அந்த ஒற்றை வரி அசத்தல்.. மிக அழகான இயக்கம்.. ஒரு காட்சியில் நகைச்சுவை எப்படி இயல்பாக வரும் என்பதற்கு இந்தக் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.. அதேபோல் நெடுமுடி வேணுவுக்கு இத்தனையாண்டுகள் கழித்தும் குழந்தை பிறக்காததை நினைத்து, “வாத்தியார் பேனாவில் மை தீர்ந்துவிட்டது..” என்று இருபொருள்பட பாடிவிட்டுப் போகும் காட்சிகளெல்லாம் யார் இந்த நாராயணி என்று கேட்க வைத்துவிட்டது..!

சுகுமாரிக்கு விருது கிடைத்தது சாலப் பொருத்தம்.. வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒரு வாழ்க்கையை.. தன்னுடைய மிக இளம் வயதில் தான் மேற்கொண்ட இந்த மொட்டை, அமங்கலி வேடத்தை தனது பேத்தியும் அணிய வேண்டுமா என்று புலம்பித் தவித்து அதனை எதிர்த்தும் முடியாமல் போய் மகனிடம் பொறுமும் காட்சிகளெல்லாம் இந்த அம்மணிப் பாட்டிபோல் வீட்டுக்கு ஒருவர் இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் தோன்றும்..! “ஓம் சிவாய” என்று வேண்டியபடியே தனக்குத்தானே சிதையைத் தயார் செய்து அதில் உட்புகுந்து கொள்ளும் காட்சியை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். சுகுமாரியம்மாவின் நடிப்புக்கு பெரும் தீனி இந்த ஒரு காட்சியிலேயே கிடைத்திருக்கிறது. அதற்கான பரிசையும் அவர் பெற்றுச் சென்றிருக்கிறார்.. பாராட்டுக்கள்..!

நல்ல படம் என்றாலும் அதிலும் சில வேண்டாதவைகள் இடம் பெறுவது வாடிக்கைதான். இதிலும் ஒய்.ஜி.மகேந்திரனின் கேரக்டரும், நளினியின் கேரக்டரும் தேவையில்லாதது. வேற ஸ்கெட்ச் கொடுத்திருக்கலாம். எதற்கெடுத்தாலும் ‘குண்டு’ போடும் மகேந்திரனின் கேரக்டர் படத்தின் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது..

துளசியாக நடித்த சம்விருத சுனில், கண்ணனாக நடித்திருக்கும் நிஷான், மோகன் சர்மா, ரேணுகா என்று அனைவருமே படத்தில் ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்கள். மோகன்சர்மாவின் இயக்கம் நான் எதிர்பாராதது.. இவருக்கு மிக முக்கிய உதவியை எடிட்டிங் செய்த பீ.லெனின் செய்திருக்கிறார்.. இது போன்ற படங்களில் இருக்கும் சிற்சில இடைவெளிகள்கூட இப்படத்தில் இல்லை.. நேர்த்தியாக நெய்யப்பட்ட பட்டாடை போல அடுத்தடுத்த காட்சிகள் விரிந்து இறுதியில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் வந்து நிற்கும்போது நம் மனசே லேசாகிப் போகிறது..!

அந்த விடியலில் அந்த சுதந்திர தினத்தன்று.. ஒரு வீட்டில் எழுந்த புரட்சி இன்றைக்கு நாடு முழுவதிலும்தான் பரவயிருக்கிறது. நமது மண்ணும், பாரம்பரியமும் எதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறது என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்ல வேண்டும்.. ஆனால் நமது சினிமா ரசிகர்களின் கண் பார்வைக்கே வராமல் போய்விட்டது.. மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் செய்பவர்களும், அதை எதிர்ப்பவர்களும் பார்க்க வேண்டிய இப்படம் இவர்களது கண்ணிலும்படவில்லை.. இதுதான் இப்படத்திற்கு நேர்ந்த துரதிருஷ்டம்.
இனிமேல் டிவிடிகள் கிடைத்தாலோ அல்லது டொரண்ட் சைட்டில் இடம் பிடித்தாலோ அவசியம் பாருங்கள்.. ஒரு புதிய அனுபவத்தை நிச்சயம் பெறுவீர்கள்..!

Our ScoreLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *