full screen background image

ஜில்லா – சினிமா விமர்சனம்

ஜில்லா – சினிமா விமர்சனம்

எத்தனையை போலீஸ் ஸ்டோரிகளை பர்த்தாகிவிட்டது. இதில் ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரியை மட்டும்தான் நம்மால் தொட முடியவில்லை. ஆனால் அதில் இருக்கும் சில காமெடிகளை திணித்து பக்காவாக மாஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட்டை விக்ரம், விஷால், சூர்யா என்று பலரும் கொடுத்துவிட்டார்கள். இளைய தளபதி அதிகமாக போலீஸ் டிரெஸ்ஸை போடவில்லை என்று நினைக்கிறேன். இதில் அணிய ஆசைப்பட்டு அவருடைய ஜில்லாவை மட்டும் கலக்கியிருக்கிறார்..

மதுரையின் மிகப் பெரிய டான் மோகன்லால். அவர் எடுத்து வளர்க்கும் பிள்ளை விஜய். இவரது அப்பாவை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரே கொலை செய்தார் என்பதால் போலீஸ் உடுப்பை பார்த்தாலே வெறியாகிவிடுவார் மனுஷர்.. இவருடைய வாழ்க்கையில் ஒரு வசந்தம் வருகிறது. சப் இன்ஸ்பெக்டர் காஜல் மூலமாக.. அந்தக் காதலை கூட போலீஸ் மீதான வெறுப்பில் தூக்கியெறிய முனைகிறார். ஆனால் இடையிலேயே விஜய்யே போலீஸில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது..

போலீஸ் வேலை கிடைக்கக் கூடாது என்பதற்காக சகலவிதமான யுக்திகளையும் செய்தும், மோகன்லால் தான் ஆசைப்பட்டபடியே விஜய்யை போலீஸ் இன்ஸ்பெக்டராக்குகிறார்.. அடுத்து மதுரையில் நடக்கும் ஒரு பெரிய சம்பவத்தால் மனம் பாதிக்கப்படும் விஜய் ஹீரோத்தனத்தை கையில் எடுத்து மனம் மாறி மோகன்லாலை எதிர்க்க.. இரண்டு பேரும் களமிறங்குகிறார்கள்.. இடையில் பல பழைய பகைகளெல்லாம் போட்டிக்கு வர.. பாசமுள்ளவராக அனைத்தையும் முறியடித்து மோகன்லாலை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாம்..!

நடனமாட தோதான உடலமைப்பு.. ஒட்டிய வயிறு.. உயரக் குறைவு.. இதையெல்லாம் வைத்துத்தான் போலீஸ் வேடம் விஜய்க்கு சூட் ஆகாது என்று அவரே நினைத்து ஒதுங்கியிருந்தார். இப்போது வருடத்திற்கு 3 படங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பரவாயில்லை.. அடித்து ஆடுவோம் என்று இறங்கிவிட்டார்..

போலீஸ் யூனிபார்முடன் பார்க்கும்போதே கம்பீரமெனில் நம்ம மலையாள நடிகர்கள்தான் முன்னோடி.. அவர்கள் அணியும் உடையில் ஒரு சின்ன சுருக்கம்கூட இருக்காது. அந்த அளவுக்கு உடை விஷயத்தில் முனைப்பாக இருப்பார்கள். இங்கே..? ம்ஹூம்.. பெரிய ஹீரோ படம்.. இதையெல்லாம் யோசிக்க முடியுமா..? இல்லாட்டி கேட்கத்தான் முடியுமா..?

விஜய்யின் அறிமுகக் காட்சியில் துவங்கும் அன்ன நடை கடைசிவரை தொடர்கிறது.. இப்படியே நடந்தாரென்றால் இன்னும் கொஞ்ச நாட்களில் ரசிகர்களுக்கு சலிப்பாகிவிடும்.. ஒரே கையால் 9 பேரை அடித்து வீழ்த்துவது.. நோஞ்சான் உடம்பை வைத்துக் கொண்டு டார்ஜான் போலிருப்பவர்களை பின்னி பெடலெடுப்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டால் விஜய்க்கு நல்லது..

அவ்வப்போது காஜலுடன் காதலிக்கும்போதுதான் கொஞ்சம் நடித்திருக்கிறார்.. காஜலை வெறுப்பேற்றவே வேறொரு பெண் போலீஸுக்கு டிரெயினிங் கொடுக்கும் காட்சியும்.. சேற்றில் புரள வைத்து வேடிக்கை பார்க்கும் காட்சியும் காமெடி..

தொட்டுக் கொள்ள ஊறுகாயை போல காஜல் ஆண்ட்டியை பயன்படுத்தியிருப்பதால் மனம் புண்பட்டு போயிருக்கிறது..! கோபம் வந்தாலோ, எரிச்சல் வந்தாலோ முதல் படத்தில் இருந்து இப்போதுவரையிலும் ஒரே மாதிரியான மேனரிஸத்தைக் காட்டுகிறார் காஜல்.. எப்போதுதான் வித்தியாசம் கிடைக்குமோ..? பாடல் காட்சிகளில் அல்வா துண்டு போல ஒயிலைக் காட்டியிருக்கிறார். இப்படியே காட்டினால் தமன்னாவை ஓரம் கட்டிவிடலாம்தான்..!

சூரி பிரதர்.. தனது அறிமுகக் காட்சியிலேயே அளப்பறையைக் கொடுத்தவர்.. போகப் போக.. அசால்ட்டாக அடித்து ஆடியிருக்கிறார். விஜய்க்கு சாலப் பொருத்தம்.. காமெடி நன்கு எழுதுபவர்களை உடன் வைத்துக் கொண்டால் இன்னும் மலையேறலாம்.. அடுத்துத் துவைத்துக் காயப் போடப் போகிறார் என்பது தெரியாமலேயே தனது போலீஸ் வேலையை பத்தி எடுத்துவிடும் பில்டப்பு.. வடிவேலுவை ஞாபகப்படுத்துகிறார்.. கொஞ்சம் சொந்த சரக்கையும், நடிப்பையும் ஏற்றுக் கொண்டால் நலம்..!

நம்ம லாலேட்டனின் கம்பீரமும், திமிரான நடிப்பும் அசத்தல்தான் என்றாலும் மனிதருக்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டே அவரது குரல்தான்.. தமிழில் கணீர் குரல்களையே கேட்டு கேட்டு அசந்து போயிருக்கும் நமக்கு, கேரள வாடையுடன் வரும் ஒரு குரலை நடிப்போடு ஒன்றிப் பார்க்க முடியவில்லை.. பிரதீப் ராவத் லாலேட்டனை அழைத்துக் கொண்டு வந்து ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இறக்கிவிட்டுவிட்டு போகும் காட்சியில் அவமானத்தை கண்களிலும், முகத்திலும் காட்டியபடியே மின்னும் நடிப்பு அசத்தல். மீசையை முறுக்கிவிட்டு யோசனையுடன் தல நடப்பதை பார்த்தாலே கேரளா ஜில்லாவில் கல்லா கட்டிவிடும் என்று நினைத்துத்தான் இழுத்துப் பிடித்தார்கள். வந்த செய்திகளை பார்த்தால் சம்பளமாகவே ஏதாவது வாங்கியிருக்கலாம் என்று லாலேட்டன் இப்போது நினைக்கிறாராம்..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்திருக்கிறார்கள். கமிஷனரின் கையை வெட்டியவர் இன்ஸ்பெக்டராக அவருக்குக் கீழேயே வேலை செய்ய வருகிறாராம்.. இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்து ஒரே ஜம்ப்பாக டிசியாகிறார் விஜய்.. இதெல்லாம் பக்கா சினிமாவில் மட்டுமே நடக்கும்.. சிரிப்பாய் சிரிக்கிறார்கள் தியேட்டரில்.. இத்தனை கலவரங்கள் நடந்தும் மோகன்லாலின் மீது கை வைக்காமல் தடுப்பது லோக்கல் மந்திரி என்கிறார்கள். அந்த மந்திரி தனது அமைச்சக வேலையைக்கூட செய்யாமல் எப்போதும் லால்கூடவே திரிகிறார்.. இது என்னங்கய்யா லாஜிக்குன்னு புரியலை..

கிளைமாக்ஸுக்கு முன்னாடி ஓரிடத்தில் கூட்டணியில் இருக்கும் ரவி மரியாவின் மீது கேமிரா பாய்ந்து அந்தக் காட்சி முடிகிறது. ஏதோ ஒரு குறியீடாக அது இருக்க.. ஆனால் கடைசிவரையிலும் அது என்னவென்று தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியை இது தொடர்பாக எடுத்து கடைசியாக எடிட்டிங்கில் காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்..

சண்டை காட்சிகள், கலவரக் காட்சிகளில் கேமிராமேன் கணேஷ் ராஜவேல் மிகக் கடுமையாகவே உழைத்திருக்கிறார் போலும்.. கேமிரா 360 டிகிரியிலும் சுழன்றிருக்கிறது.. பல காட்சிகளில் செட்டிங்ஸ் என்று தெரிந்தாலும் அது தெரியாத்து போல் இருக்க பல முனைப்புகள் எடுத்திருக்கிறார்கள். ஆனால் முதல் சண்டை காட்சியிலேயே அது தெரிந்துவிட்டதால் கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!

இப்போதைய ஹாட்டான டி.இமானின் இசையில் ‘கண்டாங்கி கண்டாங்கி’.. ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் கேட்க பார்க்க முடிகிறது.. அது என்ன மோகன்லாலுக்கு பிஜிஎம்மில் ஒன்றும்.. விஜய்க்கு வேறு ஒன்றுமாக மாத்தி மாத்தி போட்டு நம் காதை கிழித்திருக்கிறார் இமான்.

‘வீரம்’ படத்தைவிட ‘ஜில்லா’வை அதிக தியேட்டர்களில் முதலில் ரிலீஸ் செய்து கல்லாப் பெட்டியை நிரப்பப் பார்த்தார்கள்.. கடைசியில் ‘ஜில்லா’வால் ‘ஜில்லாகாத’ விஜய்யின் ரசிகர்கள் வீரம் பார்த்து தங்களது வீரத்தைக் காட்டிவிட.. உலகளாவிய அளவில் ‘வீரம்’ வசூல் மேட்டரில் இப்போதுவரையிலும் முன்னிலை வகிக்கிறது..

சம்பத், மகத், தம்பி ராமையா, சரண், ரவி மரியா, பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, இமான் அண்ணாச்சி என்று பிரபலங்கள் வரிசை கட்டி வந்தாலும் இது இளைய தளபதியின் படம் என்பதால் அனைத்தையும் அவரே சுமந்திருக்கிறார்.. சம்பத்துக்கு மட்டுமே கொஞ்சம் நடிக்க சான்ஸ்.. அந்தக் கடைசி சண்டை காட்சியில் “சக்தி இவனை போட்டுத் தள்ளுடா…” என்ற மோகன்லாலின் வசனம் யாருக்கு சரியோ.. இல்லையோ.. ரசிகர்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.. இத்தனை நீளமாக 3 மணி நேரம் உட்கார வைத்து போட்டுத் தள்ளியதற்கு பதில், 40 நிமிடங்களை எடிட் செய்து தூக்கியெறிந்திருந்தால் ‘ஜில்லா’வால் நாங்களும் ‘ஜில்’லாகியிருப்போம்..!

Our ScoreLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *